குற்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதில் புலனாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது: அவர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது..!! அமித்ஷா

குற்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதில் புலனாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 2020-ம் ஆண்டுக்கான, சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.

மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா பத்து பேருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கேரளா மற்றும் மேற்கு வங்காள காவல் துறைகளைச் சேர்ந்த தலா ஏழு பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகள் விருது பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.

புதுச்சேரியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணனும் விருது பெறுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து கூறியதாவது: ‘குற்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதில் புலனாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த புலனாய்வுக்கான பதக்கம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை அங்கீகாரம் அளிப்பதற்காகவே இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. இது குற்றப் புலனாய்வில் அவர்களின் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும். இவர்களை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது’’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: