மாதனூர் அருகே சூறாவளி காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த பசு பலி: 14 மணி நேரமாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மாதனூர்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த பாலூர் கிராமத்தில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் இரவு 7 மணியளவில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மின் ஊழியர்கள் சரிவர பதில் கூறவில்லையாம். இதனால் கிராம மக்கள், தாங்களாகவே மின்கம்பியை அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபகுதியில் மேலும் 2 இடங்களில் மின்வயர் அறுந்துள்ளது. இதனையறியாமல் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தன் (74) என்பவர் தனது சினை மாட்டை இன்று காலை விவசாய நிலத்திற்கு ஓட்டிச்சென்றார்.

அப்போது அங்கு நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு  பரிதாபமாக இறந்தது. இதைக்கண்ட கோவிந்தன் அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த அங்கிருந்த விவசாயிகள் ஓடிவந்தனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் காலை 10 மணி வரை வராததால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘மின்கம்பி அறுந்தது குறித்து நேற்றிரவு முதல் மின் வாரியத்திற்கு தொடர்ந்து தகவல் ெதரிவித்தோம். ஆனால் ஒருவரும் வரவில்லை. இருப்பினும் ஒரு இடத்தில் நாங்களே மின்வயரை அப்புறப்படுத்தினோம். இன்று காலை மின்சாரம் தாக்கி மாடு இறந்துள்ளது.

தன்னிடம் இருந்த ஒரே ஒரு மாடும் இறந்து விட்டதால் கோவிந்தன் வாழ்க்கை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். மின்ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: