×

சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018ம் ஆண்டில் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் (சிபிஐ) சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 10 பேருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கும், கேரளா மற்றும் மேற்குவங்காள காவல்துறைகளைச் சேர்ந்த தலா 7 பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கவுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகள் விருது பெறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள். புதுச்சேரியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணன் என்பவருக்கும் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : investigation ,police officers ,Union Home Ministry , Ministry of Investigation, Police Officer, Award, Union Home Ministry
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...