தடை செய்த மீன்கள் வளர்த்த தனியார் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தடை செய்யப்பட்ட மீன்கள் வளர்த்த தனியார் பண்ணைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி அடுத்த திம்மங்குத்து அருகே உள்ள ஒரு தனியார் மீன் பண்ணையில், அரசால் தடை செய்யப்பட்ட  ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்  வளர்க்கப்படுவதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்று சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தனிகைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பண்ணையில் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவது தெரியவந்தது. அங்கு சுமார் 2 ஏக்கரில் உள்ள பண்ணை குட்டையில் தண்ணீர் நிரப்பி, மீன்கள் வெளியே வராமல் இருக்க வலை அமைக்கப்பட்டிருந்தது.  உடன் அந்த வலைகளை அதிகாரிகள்  அப்புறப்படுத்தினர். மேலும், பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்டு வந்த மீன்களுக்கு உணவாக இறைச்சி கழிவுகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு மீன் வளர்ப்புக்கு தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பண்ணை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: