8 மாதங்களுக்குப் பிறகு: ஆழியார் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்தது

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை மூலம், ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில், ஆழியார் அணையில் 100 அடிக்கும் கீழ் நீர் மட்டம் குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் 60 அடிக்கும் கீழ் இருந்த ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை நேற்று கடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு ஆழியார் அணை 100 அடியை கடந்துள்ளது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில், 101.50 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு 982 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 103 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சோலையார் அணை நீர்மட்டம் 163 அடி

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் சோலையார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4746 கன அடி உள்ளது. 165 அடி உயரம் உள்ள அணையில் 163 அடி நீர் மட்டம் உள்ளது. சேடல் வழியாக 4060 கன அடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. சோலையார் மின்நிலையங்கள் இயக்க 1409 கன அடி நீர் விடுவிக்கப்படுகிறது. அணையில் 5554 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

Related Stories: