கோவையில் இறந்தது இலங்கை தாதா அங்கொட லொக்காவா?: பெற்றோரின் ரத்த மாதிரிகளை தமிழகம் அனுப்ப இலங்கை அரசு முடிவு..!!

கொழும்பு: இலங்கையை கலக்கி வந்த பிரபல நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணத்தை உறுதிப்படுத்த அவரின் பெற்றோர்களின் ரத்த மாதிரிகளை தமிழக போலீசாருக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஜூலையில் கடந்த 3ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்த அங்கொட லொக்கா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய அங்கொட லொக்கா, 2 ஆண்டுகளாக கோவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

பிரதீப் சிங் என்ற பெயரில் வாழ்ந்து வந்த இவர், மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், விஷம் வைத்து கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அப்போதைய சோதனையின் போது உயிரிழந்தவர் பிரதீப் சிங் இல்லை என்பதும் இலங்கையை கலக்கி வந்த பிரபல தாதாவான அங்கொட லொக்கா என்பதும் உறுதியானது. இந்த வழக்கில் அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, லொக்காவுக்கு அடைக்கலம் கொடுத்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இன்று அவர்கள் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு செய்துள்ளது. இதனிடையே இறந்தது அங்கொட லொக்கா தான் என்பதை உறுதி செய்ய அவரின் பெற்றோர்களின் ரத்த மாதிரிகளை தமிழக போலீசாருக்கு அனுப்ப இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று அங்கொடவின் முக்கிய கூட்டாளி இலங்கையில் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: