×

உயிருக்கு உத்தரவாதம் இன்றி அண்டை மாநிலங்களில் தவிக்கும் 2 லட்சம் தமிழக தொழிலாளர்கள்: வறுமையால் பிழைப்பு தேடி சென்றவர்களின் அவலம்

சேலம்: தமிழகத்தை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அண்டை மாநிலங்களில் பணியாற்றி வருவதாக,தொழிலாளர் நல  மேம்பாட்டு அமைப்புகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தின் மூணாறு ராஜமலா நயம்காடு எஸ்டேட்டில் சமீபத்தில் மண் சரிவு ஏற்பட்டு 70க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் புதைந்தனர். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.வறுமையை போக்க,சொற்ப சம்பளத்திற்காக நேரம்,காலம் அறியாமல் உழைத்த நிலையில்,இயற்கையின் சீற்றத்திற்கு இவர்களின் உயிர்கள் காவு வாங்கப்பட்டிருப்பது வேதனையின் உச்சம். தற்போது இறந்தவர்களின் உறவினர்கள் இழப்பீடு கேட்டும்,வாரிசுகளுக்கு வேலை  கேட்டும் அரசுக்கு கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மெத்தனமே தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்ற பரபரப்பு தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இந்த எஸ்டேட் இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமானது.இங்கு தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமன்றி,பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தினசரி 380 கூலிக்கு பணியாற்றி வருகின்றனர்.ஆனால் எஸ்டேட்டில் உள்ள இவர்களுக்கான வசிப்பிடங்கள், பணிநேர பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரங்களுடன் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கேரளா மட்டுமன்றி ஆந்திரம்,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போல், லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.வயிற்றுப்பசியை போக்கினால் போதும் என்ற ஒரே  நோக்கத்தில் பணிக்கு செல்லும் இவர்களை அந்த மாநில அரசுகளும்,தன்னார்வ அமைப்புகளும் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை.அசம்பாவிதங்கள் நேரும் போது மட்டுமே, இது போன்ற தொழிலாளர்கள் பேசுபொருளாக இருக்கின்றனர்.சில நாட்களுக்கு பிறகு அவர்களது பிரச்னைகள் தொடர்கதையாகவே இருக்கிறது என்கின்றனர் தொழிலாளர் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

இது குறித்து தொழிலாளர் நல மேம்பாட்டு ஆர்வலர் சந்திரமோகன் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து சென்று கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டுகள், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள குவாரிகள், செங்கல் சூளைகள், தோட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கேரளாவின் காபி,டீ எஸ்டேட்டுகள், ஏலக்காய் தோட்டங்கள்,ரப்பர்காடுகளில் பணியாற்றுவோர் பெரும்பாலும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.ஆந்திரா, கர்நாடகாவின் கல்குவாரிகள்,சூளைகளில் பணியாற்றுவோர் சேலம்,தர்மபுரி,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அடிப்படையில் இவர்கள் சிறு விவசாயிகளாக இருந்து மாற்றுத் தொழிலை நாடியவர்களாக உள்ளனர்.

அதேபோல் வனஉரிமைச் சட்ட குளறுபடிகளால் வாழ்வாதாரம் இழந்த  பழங்குடி மக்களாகவும் உள்ளனர். குறிப்பாக சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களே இது போன்ற தொழில்களுக்கு செல்கின்றனர்.இவர்களை சம்மந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் பெரிதாக  கண்டு கொள்வதில்லை. மாநில அரசு,உரிய  வேலைவாய்ப்புகளையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்கி கொடுக்காதது தான், இதற்கு முக்கிய காரணம்.எனவே இது போன்ற தொழிலாளர்கள் குறித்து அரசு, முழுமையாக ஒரு ஆய்வு செய்ய வேண்டும்.எந்தச்சூழலில் அவர்கள் இது  போன்ற வேலைகளுக்கு  செல்கிறார்கள்? அதனை தவிர்த்து தமிழகத்திலேயே வாழ வைப்பபதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான்,அற்ப சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, அரிய உயிர்கள் பலியாகும் அவலநிலை மாறும்.இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.

ஊரடங்கால் சிரமம் திசைமாறும் அவலம்
 

தமிழகத்தின் வடமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை கூலி வேலை என்ற பெயரில் ஆந்திராவிற்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்கள், செம்மரக்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வைக்கும் அவலமும் நடக்கிறது. இப்படி சிக்கிய பலர்,அங்குள்ள சிறைகளில் அடைபட்டு மீண்டுவர முடியாமல் கிடக்கின்றனர். பலர் கந்துவட்டி கும்பலிடம் பணம் வாங்கி, சிக்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே இது போன்ற தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதும் தொழிற்சங்க அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.


Tags : states ,Tamil Nadu , Neighboring States, Tamil Nadu Workers, Poverty
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...