×

கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு; இந்து மத முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய அமைப்பினர்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரை இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி பேரூராட்சியில் இந்து மதத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. தகவலின் பேரில் தேனி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட பொருளாளர் அக்கீம், கம்பம் நகர தலைவர் தமிமும் அன்சாரி, மமக .செயலாளர் இப்ராகீம், ஜெய்லானி, சையது முகமது ஆகியோர் கிராமத்திற்கு சென்று இறந்தவர் உடலை பெற்று கொண்டனர். பின்னர் அங்குள்ள மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இந்த நிகழ்ச்சி சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைவதாக, அவ்வூர் மக்கள் பாராட்டினர். இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகி அப்பாஸ் மந்திரி கூறுகையில், ‘‘கொரானா தொற்றால் இறப்பவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், எங்களுக்கு தகவல் கிடைத்தால், நேரில் சென்று உரிய மத முறைப்படி அடக்கம் செய்கிறோம். இப்பணி எங்களுக்கு மன நிறைவை தருகிறது’’ என்றார்.

Tags : death ,organizations , Corona, old man, deceased, Islamic organization
× RELATED திருப்பதி எம்.பி.துர்காபிரசாத் கொரோனாவால் உயிரிழப்பு