×

இன்று சர்வதேச யானைகள் தினம்; வாழ்விடங்களை இழந்த யானைகள்

கோவை: சர்வதேச யானைகள் தினம் ஒவ்வாரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். ஆனால் தற்போது யானைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்றால் அது விடை கிடைக்காத கேள்வியாகத்தான் உள்ளது. காரணம், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் அவை வாழ்விடத்தை இழந்து வருகின்றன. காடுகளில் போதிய உணவின்றி அவை உயிரிழக்கின்றன.  சில நேரங்களில் யானைகள் அதன் தந்தத்திற்காக அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 5  ஆண்டுகளில் பல்வேறு காரணங்களினால் 80 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 2016-ல் 22 யானைகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில்,  தற்போது வரை 17 யானைகள் இறந்துள்ளன. உயிரிழந்த 80 யானைகளில்  71 யானைகள் உடல்நலக்குறைவு உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், 9 யானைகள்  விவசாயிகள் தங்களின் நிலத்தை பாதுகாக்க வைத்த மின்வேலி போன்ற  செயல்களினாலும் உயிரிழந்துள்ளன.

இப்படி ெதாடர்ச்சியாக யானைகள் பலியாவதை தடுக்க அவற்றின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் என கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: யானை தந்தங்களின் மதிப்பு இப்போது இருக்கும் தங்கத்தை விட அதிகமாக இருக்கிறது. சட்டவிரோத வனவிலங்குகளின் வர்த்தகம் யானைகளை அதிகளவில் ஆபத்தில் ஆழ்த்துகிறது. காடுகள் அழிப்பு, காடுகளில் சுரங்கங்கள் அதிகரிப்பு மற்றும் காட்டை ஒட்டிய விவசாய நடவடிக்கைகள் காரணமாக யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழக்கிறது. குறிப்பாக, ஆசிய யானைகளின் வாழ்விடங்கள் துண்டு துண்டாக்கப்பட்டு யானைகள் தனிமைப்படுத்தப்படுவதால் அதன் இனப்பெருக்கம் மிகவும் பாதிப்படைகிறது. வேட்டைக்காரர்கள் யானைகளை கண்டுபிடித்து பொறிகளை எளிதில் அமைக்க ஏதுவாகிறது. ஆசிய யானைகள் கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் வாழ்விடங்களை இழந்துள்ளன. காடுகளில் அந்நிய தாவரங்களின் ஊடுருவல் யானைகளுக்கு தீனியாக அமைந்த தாவரங்களை அப்புறப்படுத்துவதால் யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தற்போது மனித-யானை மோதலும் ஒரு பிரச்னையாக உள்ளது. மனித மக்கள்தொகை அதிகரிப்பது மற்றும் வனப்பகுதி குறைந்து வருவது, யானைகளை மனித குடியிருப்புகளுடன் நெருக்கமாக கட்டாயப்படுத்துகிறது.

பயிர் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள், அத்துடன் யானை மற்றும் மனித உயிரிழப்புகள் ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தந்தங்களுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடுதலை தடுக்க வேண்டும். தந்தங்களின் வர்த்தகத்தை தடுக்க அமலாக்கக் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். யானைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வன ஆர்வலர் ஓசை காளிதாஸ் கூறுகையில், “இந்தியாவில் ஆண் யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுகின்றன. சட்ட விரோதமான மின்வேலி, ரயிலில் அடிபடுவது, விஷம், அவுட்டுகாய் வைத்து கொல்லப்படுவதாலும் யானைகள் இறக்கின்றன. யானைகளுக்கு பெரும் சிக்கலாக இருப்பது அதன்  வாழ்விடம்தான். யானை பெரிய விலங்கு. ஆண்டிற்கு யானை குடும்பம் 500 சதுர கிலோமீட்டர் காட்டினை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. அவற்றுக்கு தினமும் 250 கிலோ உணவு தேவையுள்ளது.

யானைகள் தங்களின் வலசை பாதையைத்தான் பயன்படுத்தும். கடந்த 100 ஆண்டுகளாக வலசை பாதையை மக்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தியாவில், 27 ஆயிரம் யானை உள்ளதாக கூறப்படுகிறது. வனப்பகுதிகளில் சாலைகள், அணைக்கட்டுகள், மின்சார பாதை போன்றவையால் காடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டமும், யானையின் வாழ்விடமும் சுருங்கியுள்ளது. அவை வாழும் இடத்திலும் போதிய உணவு இல்லை.
எனவே, யானைகளை பாதுகாக்க காட்டிற்கு வெளியே உள்ளே அதன் வலசை பாதைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்டம் இயற்ற வேண்டும். யானை  வாழ்விடங்களை பாதுகாக்க தேவையான சட்டத்தை இயற்ற வேண்டும். வனத்தில் உள்ள களைச்செடிகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை சீரமைத்து யானைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச யானை தினம் உருவானது எப்படி?

முதல் சர்வதேச யானை தினம் ஆகஸ்ட் 12,  2012 அன்று கொண்டாடப்பட்டது. வில்லியம் ஷாட்னர் எடுத்த “ரிட்டர்ன் டு தி  பாரஸ்ட்” என்ற திரைப்படத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஆசிய யானையினை மீண்டும்  காட்டில் கொண்டு விடப்படுவதுபோன்ற கதை அம்சம் உள்ளது. அந்த  படம் 12.8.12 அன்று வெளியிடப்பட்டதால் அந்த தினத்தில் அதாவது ஆகஸ்ட் 12ல்  ஒவ்வொரு வருடமும் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சட்ட விரோதமாக யானை வேட்டை

சீனாவில் அதிகமான யானை தந்தங்கள்  தேவையுள்ளது. இதற்காக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் சட்ட விரோதமாக  வேட்டையாடப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய யானைகளில் ஒன்றான சடாவோ சமீபத்தில்  அதன் சின்னமான தந்தங்களுக்காக கொல்லப்பட்டது. கென்யாவின் மற்றொரு யானையான  மவுண்டன் புல்லும் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது.

Tags : International Elephant Day , International Elephant Day, Habitat, Elephants
× RELATED காலி மதுபாட்டில்களை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் விவசாயிகள்