மதகுகள் இயக்கம் உள்பட அனைத்தும் துல்லியம்; பெரியாறு அணை பலமாக இருக்கிறது....ஆய்வுக்குப் பின் துணை கண்காணிப்புக்குழு உறுதி

கூடலூர்: பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை எட்டிய நிலையில், அணை பலமாக இருப்பதாக, ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழுவுக்கு உதவியாக துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் கொச்சி மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார், தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவிப்பொறியாளர் பிரசீத் ஆகியோர் கடந்த ஜூன் 24ல் ஆய்வு செய்தனர்.

அப்போது அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக இருந்தது. இதனிடையே, தொடர் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 136.75 அடியாக உயர்ந்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முன்னேற்பாடு நடவடிக்கை, மராமத்து பணி குறித்து ஆய்வு செய்ய துணைக் கண்காணிப்பு குழு முடிவு செய்தது.  இதற்காக தேக்கடி படகுத்துறையில் இருந்து, தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் குழுத்தலைவர், தமிழக பிரதிநிதிகள், கேரள வனத்துறை படகில் கேரள பிரநிதிகள் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் அணைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு மெயின் அணை, பேபி அணை, கேலரி மற்றும் மதகுப் பகுதி, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் மாலையில் பெரியாறு அணையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலகத்தில், துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் துணைக்குழு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணையின் மதகுகளில் ரேடியல் 1 மற்றும் வெர்டிகல் 4, 8 (அணையில் உள்ள 13 மதகுகளில் 1, 7, 11) ஆகிய மதகுகளை இயக்கி பார்த்தோம். அவற்றின் இயக்கம் சீராக இருந்தது. அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டிய நிலையில், கசிவு நீர் துல்லியமாக இருப்பதால் அணை பலமாக உள்ளது. துணைக்குழுவின் ஆய்வு அறிக்கை கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பப்படும்’’ என்றனர்.

Related Stories: