×

நல்ல மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போதிய அளவு பரிசோதிக்கப்படவில்லை ...ஜெர்மனி குற்றச்சாட்டு.!!!

பெர்லின்: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி முறையாக பரிசோதிக்கப்படவில்லை என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப்  போட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.05 கோடியாக உயர்ந்துள்ளது. 7.44 லட்சத்தை பலியாகி உள்ளனர். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக  கட்டுப்படுத்த முடியும் என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இதனால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கிலும் மிகத் தீவிரமாக நடக்கிறது.

இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை தனது சொந்த மகளுக்கு போட்டு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறி உள்ள அதிபர்   விளாடிமிர் புடின், வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு  மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ‘ஸ்புட்னிக் வி’ (sputnik V) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பாக பேட்டியளித்த ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி போதிய அளவு பரிசோதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கான தடுப்பூசியை  முதலில் கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருப்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தடுப்பூசியை முறையாக பரிசோதிக்காமல், அதனை லட்சக்கணக்கான மக்களுக்கு செலுத்தினால், இது பல  பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது. நல்ல தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நான் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன். தொற்றுநோயால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், முறையான சோதனைகள் மேற்கொண்டு, மக்களுக்கு  நம்பிக்கை அளிக்கும் வகையிலான விளக்கங்களை கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

இந்தியா ஆலோசனை:

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது, கொண்டுவருவது மற்றும் மக்களுக்கு செலுத்துவது ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்க நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழுவை மத்திய அரசு  அமைத்துள்ளது. இந்தக் குழுவின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Russia ,Germany , Definitely happy if good medicine is found: Russia's Sputnik V vaccine has not been tested enough ... Germany accusation. !!!
× RELATED கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு...