விதிமுறைகளை மீறி நடத்தப்படும் ஆளும் கட்சி கூட்டங்கள்: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்

சென்னை: ஊரடங்கி விதிமுறைகளை மீறி ஆளும் கட்சியினர் நடத்தும் கூட்டங்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வேகம் எடுத்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அரசின் உத்தரவுகளை ஆளும் கட்சியினரே மீறும் வகையில் ஆங்காங்கே நடத்தப்படும் கூட்டங்களால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல், 300-க்கும் மேற்பட்டவர்களில் பலர் அருகே அருகே நின்று புகைப்பாம் எடுத்தனர். இவ்வாறு ஊரடங்கு விதிகள் மீறப்பட்டதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதே போல் பரமக்குடி அருகே புதுக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழாவிற்கு வந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் திரு சதன் பிரபாகருக்கு அக்கட்சியார் பட்டாசு வெடித்து வரவேற்ப்பு அளித்தனர். சில நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனிடையே சென்னையை அடுத்த குன்றத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பொதுக்கூட்டம் போன்று நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு பழனி உள்ளிட்ட ஏராளமானோர் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் கலந்து கொண்டனர். காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமும் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: