அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேச போகின்றனர் ? : உறவினர்களுடன் பேச அனுமதிக்காத அரசுகளுக்கு நீதிபதிகள் கேள்வி!!

சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேச போகின்றனர் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசுக்குத் தான் அதிகாரம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள், நளினி முருகன் ஆகியோருக்கு, வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த நாள் எப்போது என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 2 பேரையும் பேச அனுமதித்தால் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணைக்கு இடையூறாக அமையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க 2015 வரை மட்டுமே செயல்பட அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேச போகின்றனர் என்றும் முருகன், நளினியை குடும்பத்தினருடன் காணொலியில் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Stories: