கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்.!!!

புதுடெல்லி: கொரோனா தொற்றுடன் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜி (84), கடந்த 10ம் தேதி (நேற்று முன்தினம்) உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கொரோனா  தொற்றும் இருந்தது. மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை சரி செய்வதற்காக அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு பல்வேறு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவருடைய  உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் மூளையில் ரத்தம் உறைந்ததால் பெரிய கட்டி இருந்தது. அதை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள போதிலும்,  அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (ஆர் & ஆர்) மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக உள்ளதாக என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரத்த ஓட்டம் சீராக உள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: