எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சியினர் முனைப்பு காட்ட தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதல்வரை தேர்வு செய்வோம். அ.தி.மு.க. கொள்கையின்படி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுக் கூடி யாரை முதல்வராக அறிவிக்கிறார்களோ, சொல்கிறார்களோ, அவர்தான் முதல்வர், என பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021 நமதே, என்று கருத்து தெரிவித்திருந்தார். இருவரின் மாறுபட்ட கருத்துக்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார், மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வெற்றி பெற்றோம்.

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். இந்த அரசு பிழைக்குமா? என கேள்வி எழுந்த சூழலில், தற்போது நிலையான அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், என கூறியுள்ளார்.

Related Stories: