திருச்சி - மதுரைக்கு போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கைது: ரூ.10 லட்சம் மதிப்புள்ள அபின் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி அருகே போதைப்பொருள் கடத்திய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த வாகன சோதனையில் காரில் வைத்து அபின் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, சுமார் 2 கிலோ அபினை பறிமுதல் செய்த போலீசார், அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அடைக்கலராஜ் பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் ஓ.பி.சி. அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இருவரிடமும் நடத்திய விசாரணையில், மற்றொரு காரில் போதைப்பொருள் கடத்திய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 10 லட்சம் ரூபாய் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.கவில் சமீபகாலமாக சினிமா பிரபலங்களை கட்சியில் இணைத்தது போக ரவுடிகளை, மோசடி குற்றச்செயலில் ஈடுபடுபவர்களையும் இணைத்தற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் போதைப்பொருள் கடத்தும் போது கையும் களவுமாக சிக்கியிருப்பது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: