×

கடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை..: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

ஜெனீவா: உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை தனது சொந்த மகளுக்கு போட்டு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அதிபர்  விளாடிமிர் புடின், வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு  மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ஸ்புட்னிக் வி என பெயரிடப்பட்டுள்ளது. இது சோவியத் யூனியன் முதல்  முறையாக விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயராகும்.

இந்த மருந்தை வாங்க இந்தியா, சவூதி அரேபியா, யூஏஇ, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட குறைந்தபட்சம் 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,  பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக், ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும், என்று கூறியுள்ளார். இதற்கிடையில் 3வது கட்ட சோதனையை இன்று தொடங்கவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : evaluation ,World Health Organization ,Russia , Corona, World Health Organization., Russia, Vaccine
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...