விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்த வீரர்களை பணியமர்த்த முடிவு: எம்.பி.கனிமொழி சர்ச்சையால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நடவடிக்கை..!!

சென்னை: விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில் பெரும்பாலும் மாநில மொழி தெரியாதவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கூறியபோது, நீங்கள் இந்தியர் தானா, இந்தி தெரியாதா என்று பெண் ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

 தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக, பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சோதனை செய்யும் பிரிவில் மாநில மொழி தெரிந்தவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனாலும் 100 சதவீத பணியாளர்களும் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக இருக்க முடியாது என்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: