ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக் வி’: மருந்தை வாங்குவது குறித்து டெல்லியில் உயர்நிலைக் குழு இன்று ஆலோசனை.!!!

டெல்லி: சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த எட்டு மாதத்தில் உலகில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.44 லட்சம் பேர்  பலியாகி உள்ளனர். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இதனால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி  உலகெங்கிலும் மிகத் தீவிரமாக நடக்கிறது.

இதுவரை எந்த தடுப்பு மருந்தும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மனிதர்களிடம் சோதிக்கும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மருந்து  தான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம், கொரோனா மருந்தை யார் முதலில் வெளியிடுவது என்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் போட்டியிட்டன.

இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தயாராகி விட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை தனது சொந்த மகளுக்கு போட்டு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறி உள்ள அதிபர்  விளாடிமிர் புடின், வரும் அக்டோபர் மாதம் முதல் நாட்டு  மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா கண்டுபிடித்துள்ள மருந்துக்கு ‘ஸ்புட்னிக் வி’ (sputnik V) என பெயரிடப்பட்டுள்ளது. இது சோவியத் யூனியன் முதல்  முறையாக விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயராகும்.

இந்த மருந்தை வாங்க இந்தியா, சவூதி அரேபியா, யூஏஇ, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட குறைந்தபட்சம் 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் 3  கோடி மருந்துகள் உள்பட உலகம் முழுவதும் 20 கோடி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பை மருந்து குறித்து முடிவெடுப்பதற்காக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அப்போது,  கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது, கொண்டுவருவது மற்றும் மக்களுக்கு செலுத்துவது ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், ரஷ்யா அறிவித்துள்ள தடுப்பு மருந்து குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: