தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவாரா? அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மாறுபட்ட கருத்தால் கட்சியில் திடீர் சலசலப்பு

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் மாறுபட்ட கருத்தால் கட்சியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே, அதிமுக தற்போதே தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. பல மாவட்ட செயலாளர்களை கடந்த மாதம் கட்சி தலைமை புதிதாக அறிவித்தது.

மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்டம், மண்டலம், பஞ்சாயத்து அளவில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு பதவி வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிதாக யாருக்கு சீட் வழங்கலாம் என்பது குறித்தும், தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கலாமா அல்லது கழட்டி விடலாமா? என்பது குறித்தும் உளவுத்துறை மூலம் ரகசிய கருத்துக்கணிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தி வாக்கு கேட்பது அல்லது வெற்றிபெற்ற பிறகு முதல்வர் வேட்பாளரை அனைத்து எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யலாமா? என்பது குறித்து மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர், எம்எல்ஏக்கள் தற்போது ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தபோது, “தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அதிமுக வரலாற்றில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்துள்ளனர்.

இவர்களில் யாரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வராக தங்களை எப்போது அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. வெற்றிபெற்ற பிறகே அதிமுக எம்எல்ஏக்கள் தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்தனர். அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி, யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர் ஆவார்” என்று கூறினார். இதன்மூலம் மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக முன்கூட்டியே அறிவிக்காது என்று கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பதில் அளிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், `எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்’’ என்ற தலைப்பில் “இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம், 2021ம் நமதே” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இரண்டு அமைச்சர்களும் தனித்தனி கருத்துக்களை கூறி உள்ளதால், 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா? அல்லது தேர்தல் முடிந்து, அதிமுக அதிக இடங்களை பெற்றால் எம்எல்ஏக்கள் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்களா? என்ற மோதல் அதிமுகவில் தற்போதே வெடித்துள்ளது தொண்டர்களிடமும், தலைவர்களிடம் அதிர்ச்சியையும், கட்சிக்குள் திடீர் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, பதில் அளிக்காமல் சென்று விட்டார். இதன்மூலம் அவரும் எடப்பாடி பழனிச்சாமியை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமைச்சர்களிடம் சில மாற்றங்களைப் பார்க்க முடிவதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். 2021 தேர்தலுக்கு முன் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்படுவாரா அல்லது அதிமுக அதிக இடங்களை பெற்றால் எம்எல்ஏக்கள் முதல்வரை தேர்வு செய்வார்களா என்ற மோதல் வெடித்துள்ளது.

Related Stories: