×

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் தகுதியற்ற 152 பேர் ஆசிரியர்களாக நியமனம்: நிர்வாகம் நோட்டீஸ்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உரிய தகுதியில்லாமல், சட்டத்துக்கு புறம்பாக நியமிக்கப்பட்ட 152 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளை வாரியத்தின் கீழ் மொத்தம் 6 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி(ஆண்கள்), செல்லம்மாள் கல்லூரி(பெண்கள்), காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பச்சையப்பன் கல்லூரிகள், கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவை அடங்கும். இந்த கல்லூரிகளில் விதிகளை மீறியும் தகுதி இல்லாத ஆட்களையும் ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் புகார்கள் குறித்து, பச்சையப்பன் அறக்கட்டளை வாரியத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்தன. குறிப்பாக கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு(யு.ஜி.சி), பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டது கண்டறியப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016 வரை இந்த விதிமீறல்கள் நடந்திருந்தது.

குறிப்பாக தொலை தூர கல்வி மூலம் பட்டம் பயின்றவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் ஒரு முதன்மை பாடம், முதுநிலை படிப்பில் வேறொரு முதன்மைபாடம் படித்தவர்கள், நெட், ஸ்லெட் போன்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், முனைவர் பட்டம் பெறாதவர்கள் பலர் குறுக்குவழியில் ஆசிரியர் பதவி பெற்றிருந்தனர். இவர்கள், உதவிப் பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் பணியாற்றி வந்தனர்.  

இந்த நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 152 பேருக்கு நீதிபதி சண்முகம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 234 ஆசிரியர்களில் 60 பேர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள். மீதமுள்ள 174 பேர் தகுதியற்றவர்கள். சட்டத்துக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஒரு கரும்புள்ளி போன்றது. அது தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு மாணவர்கள் மற்றும் சமுதாயத்தின் மன வலிமையை சீர்குலைக்கும். தகுதியற்றவர்கள் பணியில் நீடிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே மீதமுள்ள 152 பேரின் பணி நியமனத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் கூறும்போது, இந்த முறைகேடுகள் நடைபெறும்போதே நாங்கள் குற்றச்சாட்டுக்களை கூறினோம். ஆர்ப்பாட்டம், போராட்டங்களையும் நடத்தினோம். ஆனால் அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பணத்துக்காக இதுபோன்ற விதிகளை மீறிய நியமனங்களை செய்துள்ளனர். இதனால் இந்த நியமனங்களை ரத்து செய்வது மட்டுமல்லாமல், பணத்தை வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மீது போலீசில் புகார் செய்து, அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தெரிவித்தனர்.

* பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் மொத்தம் 6 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
* 2014 முதல் 2016ம் ஆண்டுகளில் அந்த கல்லூரிகளில் 234 ஆசிரியர்கள் நியமனம்
* தகுதியற்றவர்கள் பணியில் நீடிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
* 174 பேர் போதுமான கல்வி தகுதியில்லாதபோதும் பணி பெற்றுள்ளார்கள். இவர்களில் 22 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் மீதமுள்ள 152 பேருக்கு நோட்டீஸ்.

Tags : teachers , Pachaiyappan Foundation College, 152 ineligible, teacher, appointment, administration, notice
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...