×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு

பெரம்பூர்: பெரம்பூர், ரமணா நகர், சுப்பரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர், வேப்பேரியில் போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கலையரசி (30). நேற்று முன்தினம் மாலை கலையரசி குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்த கண்ணன் இவரது கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு தனது கணவர் செல்வகுமார் வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். உடனே செல்வகுமாரும், அவரது தயாரும் சென்று கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது, அவர் நான் யார் தெரியுமா, என்னையே எதிர்த்து பேசுகிறீர்களா என்று கேட்டபடி, இருவரையும்  கடுமையாக தாக்கியுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த பெண்கள் திரண்டு, கண்ணன் அவரது வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அத்து மீறி நடந்து கொள்வதாக தெரிவித்தனர். பின்னர், கண்ணன் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்குவரத்து தலைமை காவலர் கண்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பாதிக்கபட்ட கலையரசி கூறுகையில், ‘‘என்னை போன்று அக்கம் பக்கம் வீட்டில் உள்ள பெண்களிடமும் கண்ணன் தவறாக நடந்து கொள்கிறார். காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னை ஏதும் செய்யமுடியாது எனக்கூறி மிரட்டுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா களப்பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடக்கமுயன்து தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

* நாடகம்
காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்திருப்பதை அறிந்த தலைமை காவலர் கண்ணன், உடனடியாக தலைமறைவானார். இதனிடையே, அவரை பிடித்த செம்பியம் போலீசார், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை காப்பாற்றும் நோக்கில் உயர் அதிகாரிகள் இவ்வாறு டிராமா செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மனநலம் சரியில்லாதவர் எவ்வாறு தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags : Chief Constable ,home , Home alone, woman, sexual harassment, chief constable, prosecution
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...