×

சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அந்தப் பெரும்பணிக்கு திமுகவினர் அனைவரும் தயாராக  வேண்டும். மக்கள் பிரச்னைகள் அனைத்தையும் அடையாளம் கண்டு அவர்களுக்காகக் குரல் கொடுங்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவை தலைவராகப் பொறுப்பு வகித்த மறைந்த ஜி.சுகுமாறன் திருவுருவப் படத்தையும், ‘’கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்’’ என முத்தமிழறிஞர் கலைஞரால் புகழப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மாரியய்யா திருவுருவப் படத்தையும் திறந்து வைத்து, புகழஞ்சலி உரையாற்றினார்.

ஜி.சுகுமாறன் படம் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஜி.சுகுமாறன் மறைவு என்பது, அவரது குடும்பத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு, திமுக குடும்பங்களுக்கே ஏற்பட்ட இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். இது கொரோனா காலம் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை நாம் இழந்துள்ளோம். இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ‘’மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’ என்ற நிலையில் தான் இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன.   

கொரோனாவோடு சேர்ந்து இந்த ஆட்சியும் எப்போது முடியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.அனைவரும் உடல்நலனைப் பேணிக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே அனைவரும் உங்களது ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். மூத்த நிர்வாகிகள் இன்னும் கவனமாக இருங்கள்.வேறு உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் மிகமிக எச்சரிக்கையாக இருங்கள். உடல்நலம்-கழகப் பணி-மக்கள் சேவை ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களைக் கொண்ட கழகம், உங்களுக்கு எல்லா வகையிலும் துணைநிற்கும் என்று உறுதியளித்து விடை பெறுகிறேன் என்றார்.

மேலும், மாரியய்யா திருவுருவப் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டமன்றமாக இருந்தாலும்- திமுகவின் பொதுக்குழுவாக இருந்தாலும்- பொதுக்கூட்டமாக இருந்தாலும்-பச்சைச் சால்வை அணிந்து கம்பீரமாக வருவார் மாரியய்யா. அவரது கம்பீரத்தைப் பார்த்துத் தான் ‘’கந்தர்வகோட்டையின் கட்டபொம்மன்’’ என்று தலைவர் கலைஞர் அழைத்தார். கழகத்தால் தனக்கு என்ன லாபம் என்று கருதாமல், தன்னால் இயக்கத்துக்கு என்ன லாபம் என்று கருதிச் செயல்பட்ட தொண்டர்களில் ஒருவர் மாரியய்யா. அவரைப் போன்ற ஏராளமான மாரியய்யாக்களால் தான் திமுக என்ற மாபெரும் கோட்டை கட்டப்பட்டது. மாரியய்யாவின் வாழ்க்கை என்பது கழகத்தவர் அனைவருக்கும் ஒரு வகையான பாடம். திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.

துரோகச் சிந்தனை கொஞ்சமும் இல்லாத மனிதராகக் கழகத்தில் இருந்தார். கழகப் பொறுப்புகளை வகித்துத் திறம்பட பணியாற்றினார். பொதுப் பொறுப்புகளுக்கு வந்தபோது மக்கள் போற்றும் வகையில் செயல்பட்டார். திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.-இப்படி 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் மனிதராக மாரியய்யா இருந்தார். அத்தகைய மனிதரை முன்னோடியாகக் கொண்டு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அந்தப் பெரும்பணிக்கு அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் பிரச்னைகள் அனைத்தையும் அடையாளம் கண்டு அவர்களுக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுதான் மாரியய்யாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

* உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே-1989ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கலைஞர் உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன். சமூகம்-பொருளாதாரம்-குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,assembly elections ,speech ,MK Stalin , Assembly election, DMK, ready, MK Stalin's speech
× RELATED ஆந்திரா சட்டமன்ற தேர்தலில்...