கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ.9000 கோடி வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பு சிறப்பு நிதியாக தமிழக அரசுக்கு ரூ.9ஆயிரம் கோடியை வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடத்திய 10 மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகள், மையங்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 24 படுக்கைகள் உள்ளன. கடுமையாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர்தர வென்டிலேட்டர்கள் தேவை. எனவே, மத்திய அரசு உயர்தர வென்டிலேட்டர்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

 தமிழகத்திற்காக ரூ.5.25 கோடிக்கு 3 லேயர் மாஸ்குகள், ரூ.48.05 லட்சத்திற்கு என்-95 மாஸ்குகள், ரூ.41.3 லட்சத்திற்கு முழு உடல் கவசங்கள், ரூ.43.26 லட்சத்திற்கு பிசிஆர் பரிசோதனை கிட்டுகள் வாங்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைப்பகுதி மக்கள் சுமார் 47 லட்சம் பேருக்கு இலவசமாக மாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாஸ்குகளை கொள்முதல் செய்ய ரூ. 4.5 கோடிக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து இதுவரை 3.77 லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தே பாரத் மற்றும் சமுத்ரசேது திட்டத்தின்கீழ் 60,875 பேர் விமானங்கள் மூலம் தமிழகம் வந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 50 மருந்து நிறுவனங்கள் தமிழகத்தில் கொரோனா தொடர்பான மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இதுவரை ரூ.5,329 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.712.64 கோடியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.512.64 கோடி மட்டும் வந்துள்ளது. ஏற்கனவே, தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அந்த தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி வழங்க வேண்டும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைவாக தமிழகத்திற்கு தர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், நெல் கொள்முதல் மானிய தொகையான ரூ.1321 கோடியை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு தொழில் வளர்ச்சி வங்கி ரூ.1000 கோடி தருமாறு அந்த வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சிறு உதவி குழுக்களுக்கு ரூ.2 லட்சத்தை வங்கிகள் வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* ரேஷனில் பருப்பு இலவசம்

முதல்வர் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசும்போது, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இலவச பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நவம்பர் மாதம் வரை மக்களுக்கு வழங்குவதற்காக 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

Related Stories: