×

தமிழகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உட்பட 10 மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தினால் நாடு மீளும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘தமிழகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனாவை வீழ்த்தினால், நாடே வெற்றி பெறும்,’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பும், பலியும் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உட்பட 10 மாநிலங்களில்தான் அதிகமாக இருக்கிறது. நாட்டின் மொத்த பாதிப்பு, பலியில் இந்த மாநிலங்கள் 80 சதவீதத்தை கொண்டுள்ளன. எனவே, கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும், வைரஸ் தொற்று நிலவரம் குறித்தும் அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கினர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
பாதிப்பு அதிகமாகவும், பரிசோதனை எண்ணிக்கை குறைவாகவும் உள்ள மாநிலங்களில், குறிப்பாக பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 10 மாநிலங்களில்தான் நாட்டின் 80 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த 10 மாநிலங்களில்தான் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதனால்தான், நாம் இங்கு ஒன்றாக அமர்ந்து, மறுஆய்வு செய்து, ஆலோசிக்க வேண்டி உள்ளது. இந்த 10 மாநிலங்களும் கொரானோவை வீழ்த்தினால், தொற்று நோய்க்கு எதிரான போரில் நாடே வெற்றி பெறும்.

அதே சமயம், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த 10 மாநிலங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்று நாட்டின் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தொடர்ந்து குறைந்து வருகிறது. இது திருப்தி அளிக்கிறது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம், நமது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது என்பதை அறியலாம். அதை விட முக்கியமானது, இந்த புள்ளிவிவரங்கள் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது. அவர்களின் நம்பிக்கையால், நோய் தொற்றின் மீதான பயம் குறைந்துள்ளது. இன்னும் நாம் அதிக பரிசோதனை செய்து கவனம் செலுத்தினால், பாதிப்பு எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் மேலும் குறைக்கலாம்.

கட்டுப்படுத்துதல், தொடர்புகளை தடமறிதல், கண்காணித்தல் இவை மூன்றும் தான் கொரோனாவுக்கு எதிரான போரில் நமது முக்கிய ஆயுதங்களாக உள்ளன. தற்போது மக்கள் மத்தியில் புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். இதுவும் நமது விழிப்புணர்வூட்டும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான். தற்போது, நாம் சரியான பாதையில் பயணித்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலமும் அதன் திறனுக்கு ஏற்ப கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன. மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரு அணியாக இருந்து இணைந்து செயல்பட்டால் நல்ல முடிவு எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

* 72 மணி நேரத்தில் கண்டுபிடித்தால்...
மோடி மேலும் பேசுகையில், ‘‘கொரோனா பாதித்தவரை 72 மணி நேரத்தில்  கண்டுபிடித்தால், அதன் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என  நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே, பரிசோதனையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : states ,Modi ,Maharashtra ,Uttar Pradesh ,country ,speech ,Tamil Nadu , Tamil Nadu, Maharashtra, Uttar Pradesh, 10 states, Corona, if controlled, the country will return, Prime Minister Modi
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...