மத்திய சுகாதாரத்துறையின் புதிய விதிமுறையை ஏற்க விமான நிலைய மருத்துவ குழுவினர் மறுப்பு: சென்னையில் பயணிகள்- அதிகாரிகள் வாக்குவாதம்

சென்னை: மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் இந்தியர்களுக்கான புதிய விதிமுறையை கடந்த 8ம் தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளது. புதிய விதிமுறையை சென்னை விமானநிலையத்தில் தமிழக அரசின் மருத்துவ குழுவினர் ஏற்க மறுப்பதால் பயணிகள், அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய சுகாதாரத்துறை, கடந்த 8ம் தேதியிலிருந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்திய பயணிகளுக்கு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் இந்திய பயணி, 96 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா சோதனை செய்து, தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றை பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்னதாக இணையதளம் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு விமான நிலையங்களில் வரும் பயணிகள் இந்திய விமானநிலையங்களில் மருத்துவ பரிசோதனை முடித்து, அரசின் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய வீடுகளுக்கு நேரடியாக சென்று தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் உள்ள தமிழக சுகாதாரத்துறையினர், ‘மத்திய சுகாதாரத்துறை உத்தரவு எங்களுக்கு வரவில்லை. எனவே அந்த மருத்துவ சான்றிதழ் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று கூறி ஏற்கனவே உள்ள முறைப்படி அரசு முகாம்களுக்கே தனிமைப்படுத்த அனுப்புகின்றனர். இதுபோல, நேற்று அதிகாலை துபாயிலிருந்து 179 இந்தியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகள் சிலர் மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்து, தங்களை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

ஆனால், சென்னை விமானநிலையத்தில் உள்ள தமிழக அரசு மருத்துவ குழுவினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் விமானநிலையத்தில் மருத்துவ குழுவினருக்கும், பயணிகளுக்குமிடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் நடந்தன.

ஆனால், அதிகாரிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால் அந்த விமானத்தில் வந்த 179 பயணிகளும் மருத்துவ பரிசோதனை நடத்தி அரசின் இலவச தங்குமிடங்கள் மற்றும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: