×

கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எம்எல்ஏக்களின் மருத்துவ செலவை அரசு செலுத்தும்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 850 பேருக்கு எம்.ஆர்.எப். நிறுவனம் வழங்கிய உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் மட்டும் கொரோனாவுக்காக 11 ஆயிரத்து 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள 1,305 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை இல்லையென்றாலும், மீட்பு படையினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் என 29 எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனையில் என்ன சிகிச்சை எடுத்தார்கள் என்பது தெரியாது.

அவர்கள் கொடுக்கும் பில்களுக்கு சட்டப்பேரவை செயலகம் (தமிழக அரசு) பணம் கொடுக்கும். அதேநேரம், தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது  என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன்,  கண்காணிப்பு அதிகாரி வர்கீஸ் மண்டல அலுவலர் தேவேந்திரன், செயற்பொறியாளர் வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Udayakumar ,hospital ,government ,Corona , Corona, Private Hospital, Treatment, MLA, Medical Expenditure, Government Payments, Minister Udayakumar
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை