×

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: குண்டும், குழியுமாக உள்ள சாலையை புதுப்பித்து, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் இருந்து பிச்சைநாயக்கன் குளம் வரை செல்லும் சாலை வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது. இவ்வழியாக பூசிவாக்கம், புத்தாகரம், கிரிபேட்டை உள்பட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்ச்சாலையில், ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும், பள்ளங்களில் விழுந்து காயமடைந்து, விபத்தில் சிக்கும் அவலமும் உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் என பல அதிகாரிகளிடம், பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நீண்ட கால போராட்டத்துக்கு பின், கடந்த மாதம் இந்த சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலை பணியை முறையாக செய்யாததால், ஆங்காங்கே பள்ளங்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. அதை அதிகாரிகள் சீரமைத்தனர். ஆனால், தற்போது சீரமைக்கப்பட்ட சாலை, ஒரு மாதத்தில் ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. இதுபோன்ற தரமற்ற சாலை அமைப்பதற்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இதனால், தரமற்ற தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தரமற்ற தார்ச்சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road , Damaged road, rehabilitated, public
× RELATED குண்டும் குழியுமான ஓ.எம்.ஆர். சாலை; வாகன...