129 ஆண்டுகளாக பராமரிக்காத உத்திரமேரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: விவசாயத்துக்கு பிரதானமாக விளங்கும் உத்திரமேரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருர் ஏரி 543 ஹெக்டேர் பரப்பளவு, 8 கிமீ நீளம் உள்ள கரைகளை கொண்டுள்ளது. இந்த ஏரி சுமார் 18 கிராமங்களில் உள்ள சுமார் 6000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியளிக்கிறது.

இதன் ஆழம் 20 அடி. ஆனால் தற்போதைய ஆழம் 10 அடி. இந்த ஏரி, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1891ம் ஆண்டு தூர் வாரப்பட்டது. அதன் பின்னர் 129 ஆண்டுகளாக தூர் வாரவில்லை. இதனால் ஏரியின் ஆழம் குறைந்து நீரின் கொள்ளளவு குறைகிறது.

உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. நன்செய் பயிர்களான நெல், கரும்பு மற்றும் கத்தரி, வெண்டை உள்பட பலவித காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதனால் உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது, மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட பொருளாளர் சங்கரன், நெசவாளர் அணி ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர்கள் ராவணன், ஏழுமலை, சந்திரசேகர், வெங்கடேசன், ராமானுஜம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: