மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்: 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றுப்படுகையில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும், பல்வேறு இடங்களில் உள்ள ஆற்றுப் படுகையில் நள்ளிரவு நேரங்களில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரியில் மணல் கடத்தப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்று கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆற்று மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ கிஷோர்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது, செய்யாற்றில் இருந்து 5 லாரிகளில் மணல் எடுப்பது தெரிந்தது. உடனே போலீசார், அங்கு சென்று, 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: