×

அரசு மருத்துவமனை குறைகளை கண்டித்து பல்வேறு சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் குறைகளை கண்டித்து, பல்வேறு சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மதுராந்தகம் ஒன்றிய வாலிபர் சங்க செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், மாதர் சங்க மாநில செயலாளர் பிரமிளா, ஒன்றிய செயலாளர் இந்திரா, மாவட்ட குழு உறுப்பினர் அனுசுயா, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், கட்டு கட்டும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள் மற்றும் புற நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த அரசு மருத்துவமனைக்கு மதுராந்தகத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், செங்கல்பட்டுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால், கூடுதல் காலதாமதமும்  உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை சரி செய்து இங்கேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மேல் சிகிச்சைக்காக மட்டுமே செங்கல்பட்டுக்கு அனுப்பவேண்டும் என்றனர்.

Tags : Demonstration ,associations ,government hospital , Government Hospital, grievances, condemnation, various associations, protest demonstration
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...