×

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் 2005ம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். மகளிருக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றி உள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாமக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். டாக்டர் கலைஞர் பெண்கள் சம உரிமை பெற 1989ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989ல் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில் பூர்வீக சொத்துடமையில் பெண் வாரிசுகளுக்கான சம பங்கை பின் தேதியிட்டு உறுதிப்படுத்தி இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் வாயிலாக ஆண்,பெண் இருவருக்கும் சட்டம் சமத்துவமான நிலையை உறுதிபடுத்தியுள்ளது. நீண்ட காலமாக நிலவி வந்த பாலின பாகுபாடு, பெண்களுக்கு இழைக்கப்பட்டுவந்த அநீதி களையப்பட்டுள்ளது.


Tags : Leaders ,Supreme Court ,women , Woman, property equity, Supreme Court judgment, leaders, welcome
× RELATED புதிய தேர்தல் ஆணையர்கள்...