×

ஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘பெற்றோருக்கு சொந்தமான குடும்ப சொத்தில் ஆண்களுக்கு உரிமை உள்ளது போன்று, பெண்களுக்கும் சம உரிமை உண்டு,’ என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோருக்கு சொந்தமான அல்லது குடும்ப சொத்தை பிரிப்பதில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு நீண்ட காலமாக உள்ளது. கடந்த காலங்களில், ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்,’ என இருந்தது. அதன் மூலம், பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. அங்குள்ள பூர்வீக சொத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. மேலும், திருமணத்தின் போது பெற்றோர் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் சீதனம் மட்டுமே அவர்களுக்கான அதிகபட்ச சொத்தாக கருதப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1956ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘’இந்து வாரிசுரிமை சட்டம்’ தான் பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்று முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. உதாரணமாக ஒரு ஆணுக்கு, மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் குடும்பத் தலைவனாக இருக்கும் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் ஆகியோருக்கு மட்டுமின்றி, மகள்களுக்கும் சம பங்குகளாக கிடைக்கும். அதில், அனைவருக்கும் சமஉரிமை உண்டு எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டும் இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை அப்போதைய அரசான காங்கிரஸ் கட்சி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமைகள் உண்டு என விரிவுபடுத்தப்பட்ட சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2005க்கு முன்னதாக பெற்றோர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பாகப்பிரிவினை மேற்கொண்டாலோ பெண்கள் தங்களுக்கான பங்கு சொத்துக்களை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பெற்றோர் சொத்தில் ஆண்களுக்கு இணையாக மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் செல்லத்தக்க ஒன்றா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘2005ம் ஆண்டு முன்பு தந்தை உயிரிழந்து இருந்தால் குடும்ப சொத்தின் பங்குகளை மகள் பெற முடியாது,’ என்று ஒரு நீதிபதியும், ‘சொத்தில் சமஉரிமை உண்டு,’ என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில், ‘திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் 2005-ன்படி, குடும்ப சொத்தின் பங்கீட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமபங்கு உண்டு. இதில் பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் எப்போதும் கண்டிப்பாக அவர்களுக்கு மகளாகத்தான் இருப்பாள். அதில் எந்தவிதமான மாற்றமோ அல்லது சமரசமோ கிடையாது. கடந்த 2005ம் ஆண்டு இது குறித்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னரே தந்தை இறந்து இருந்தாலும், இந்த உத்தரவு பொருந்தக்கூடிய ஒன்றாகும். அதனை மீறும் அதிகாரம் கிடையாது,’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

* பெண்கள் உற்சாகம், வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் வரவேற்று இருப்பதுடன், பெருமகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். இதில், கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு விசாரித்த மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : children ,Supreme Court ,women , Male child, female parallel, property, equal rights, Supreme Court, judgment
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...