×

வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நாளை இயங்கும்: கூடாரம் அமைக்கும் பணியில் வியாபாரிகள் தீவிரம்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை இயங்குகிறது. கடைகளுக்கான கூடாரம் கட்டும் பணியில் வியாாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, வடசேரி காய்கறி சந்தை மூடப்பட்டு பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வந்தது. கடந்த ஜூன் மாதம் தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிக சந்தையும் மூடப்பட்டது. சந்தை மூடப்பட்டு 1 மாதம் கடந்து விட்டதால், மீண்டும் தற்காலிக சந்தையை திறக்க வேண்டும். இல்லையென்றால், வடசேரி காய்கறி சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக ஆணையர் ஆஷா அஜித், ஆர்.டி.ஓ. மயில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் உள்ளிட்டோர் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி போதிய  இடைவெளிகளுடன் , தற்காலிக சந்தையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். ஒரே ஒரு நுழைவு வாயில் மூலமே வியாபாரிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். சானிடைசர்  மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் தான் பொதுமக்கள் உள்ளே வர வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் உள்ளே வரக்கூடாது. அதிகாலை வேளையில் லோடுகள் ஏற்றி, இறக்க வேண்டும் என முடிவு  செய்யப்பட்டது.

கடைகளின் வரிசை எண்ணின் அடிப்படையில் கடை ஒதுக்கப்படும் என்றும் கூறினர். இது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தைக்கான கடை கட்டும் பணி நடக்கிறது. சவுக்கு கம்புகள் மூலம் கூடாரம் அமைக்கும் பணிகள்  நடந்தன. இன்று காலையிலும் கூடாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஒவ்வொரு வியாபாரியும் ரூ.10,000 கொடுக்க வேண்டும்.  இன்று காலை வரை 90 கடைகளுக்கான வியாபாரிகள், கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருந்தனர். நாளை முதல் கடைகள் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், இன்று காலை வடசேரி பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். சிபிஎச் மருத்துவமனை எதிரில் கால்வாய்கள் அடைப்புகள் இருந்தன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் வடசேரி பஸ் நிலைய தற்காலிக சந்தை அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.

Tags : bus stand ,Traders , Vadacherry Bus Stand, Temporary Vegetable Market
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி