×

கொரோனா கவச உடைகளை முறையாக அப்புறப்படுத்தாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மதுரை: மருத்துவர்கள் அணியும் கொரோனா தடுப்பு உடைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாத தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. மதுரை மாநகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவைகளில் இருந்து தினசரி உருவாகும் மருத்துவக் கழிவுகளை கூழாக்கி அழிக்க பிளாண்ட் அமைக்கப்பட்டிருக்கும். இது இல்லாத மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மண்டலம் 2, வார்டு 44 மேலூர் மெயின் ரோடு ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டிற்கு எதிரில் சாலையோரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டி மற்றும் குப்பைத்தொட்டி அருகில் மருத்துவர்கள் அணியும் கொரோனா கவச உடைகளை  தனியார் மருத்துமனையினர் கொட்டிச் சென்றதாக கமிஷனர் விசாகனுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவரின் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா தடுப்பு உடை உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டிவிட்டு சென்ற தனியார் மருத்துவமனையை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அந்த மருத்துவமனை ஊழியர்கள் மூலமாகவே மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் அப்புறப்படுத்தச் செய்தனர். மேலும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் ஓம்சக்தி, மனோகரன், துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Tags : hospital ,corona armor ,Corona , Corona armor, private hospital, fine
× RELATED மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா