×

சின்னமனூர் அருகே 2 ஏக்கர் குளத்தை காணவில்லை: கூழையனூர் கிராமமக்கள் புகார்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே 2 ஏக்கர் குளம் காணாமல் போய்விட்டதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னமனூர் அருகே போடி ஒன்றியத்தில் கூழையனூர் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கூழையனூர் மேற்கு பகுதியில் மல்லிங்கேஸ்வரன் கோயில் மலை கரடு உள்ளது.இதன் அடிவாரத்தில் இரண்டு ஏக்கரில் மல்லிகேஸ்வரன் குளம் உள்ளது. இதில் தேங்கும் மழைநீரால் நிலத்தடி நீர் ஊற்று எடுத்து சுமார் 500 ஏக்கருக்கு மேலாக கிணறு மற்றும் ஆழ்குழாய் பாசனம் நடந்து வருகிறது.

இந்த குளத்தை பாதுகாக்கும் வகையில் நான்கு புறங்களிலும் கருங்கல் கரை எழுப்பி தடுப்புச் சுவர்போல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மர்மநபர்கள் சிலர் இந்த குளத்தில் திடீரென ஜேசிபி இயந்திரம் மூலம் கரைகள் முழுவதையும் உடைத்து, மண்ணை அள்ளி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் குளமே தெரியாத அளவிற்கு சமமாக்கிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.மறுநாள் இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் கிராம கமிட்டியிடம் தெரிவித்தனர்.
இது குறித்து கூழையனூர் கிராமமக்கள் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குளம் காணவில்லை என்று புகார் செய்தனர்.

இந்த குளம் காணாமல் போனதால் மழைநீர் தேங்கிட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாசனம் கிடைப்பதற்கு வழி இல்லாததால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு காணாமல் போன குளத்தை மீட்டு தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,Chinnamanur ,Koozhayanur , Chinnamanur, pond missing, Koozhayanur villagers, complaint
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி