×

சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்க கோரி கொடைக்கானலில் சுற்றுலா சார் தொழிலாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்கக்கோரி கொடைக்கானல் சுற்றுலா சார் தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுற்றுலா சார் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், சுற்றுலா பயணிகளை நம்பி தொழில்செய்யும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா சார் தொழிலாளர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலாதள வணிகர் கூட்டமைப்பினர் வழிகாட்டிகள், புகைப்பட கலைஞர்கள் என 500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கக் கோரியும், சுற்றுலா சார் தொழிலாளர்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தவறும் பட்சத்தில் தங்கள் வசம் உள்ள ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு கொடுத்துள்ள அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 3,02,815ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,44,675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 5,041 ஆக உயர்ந்துள்ளது.



Tags : Tourist workers ,Kodaikanal , Kodaikanal, Tourism
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்