×

மேட்டூர் அணைக்கு படிப்படியாக குறைந்து வரும் நீர்வரத்து!!!

மேட்டூர்:  கர்நாடக அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நாளைய தினம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரங்களில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர் அதிகளவு நிரம்பியதால், காவிரி அணையிலிருந்து உபரி நீரானது தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டது.

இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மேட்டூர் அணைக்கு சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இவை படிப்படியாக அதிகரித்து கடந்த 8ம் தேதியன்று 45 ஆயிரம் கன அடியாக மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருந்தது. இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழக மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து வருகிறது.

அதாவது அணையின் நீர்வரத்தானது ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 95.10 அடியாக உள்ளது. இதனால் நாளைய தினம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam , Gradually, decreasing ,water flow ,Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி