×

ஊரடங்கு அறிவிப்புக்கு பிறகு டெல்லி அரசு பள்ளிகளில் படித்து வந்த சுமார் 15% மாணவர்களை கண்டறிய முடியவில்லை: மணிஷ் சிசோடியா

டெல்லி: ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு டெல்லி அரசுப் பள்ளிகளில் படித்து வந்த சுமார் 15% மாணவர்களை கண்டறிய முடியவில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கிராமப் பகுதி மாணவர்களுக்கு இணையம் அல்லாத பிறவழி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டெல்லி அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்பாக பேசிய டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா, டெல்லியில் உள்ள 1,100 அரசுப்பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வசதி இல்லாதவர்களுக்கு தொலைபேசி மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 15 சதவீத மாணவர்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இல்லை. ஆன்லைன் வகுப்புகளிலும் அவர்கள் கலந்து கொள்வதில்லை. ஏற்கெனவே கொடுத்திருந்த முகவரியில் தற்போது அவர்கள் வசிக்காததால் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி மூலமாகவும் மாணவர்களிடம் பேச முடியவில்லை. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் அவர்களைக் கண்டுபிடிக்க அறிவுறுத்தி இருக்கிறேன். இதுபோல் சராசரியாக ஒவ்வொரு வகுப்பிலும் 4 முதல் 5 மாணவர்களை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.



Tags : Delhi ,government schools ,curfew announcement ,Manish Sisodia ,Corona , Corona, Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு