×

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..: கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதி!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் கூட தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்து நாடு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது. ஏற்கனவே கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தியதால் நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ம் தேதி  வந்துள்ளார்.  அவர் தங்கியிருந்த 3வது நாளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என தெரியவந்தது.

ஆனால், அவர் வந்த 9 நாட்களுக்கு பின்னர் நடந்த மற்றொரு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.  இதனால், ஆக்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதனால் நியூசிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,220 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இல்லை.  நியூசிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து கொள்வோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 22 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை பொது இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்த நிலையில், 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Newcomer ,New Zealand ,corona treatment center , New Zealand, Corona, health
× RELATED திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சி...