×

10 ஆண்டுகளாக மண்ணில் புதைந்து கிடக்கும் ரோடு ரோலர்: ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?

கொள்ளிடம்: கடந்த 10 ஆண்டுகளாக மண்ணில் புதைந்து கிடக்கும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ரோடு ரோலரை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ரோடு ரோலர் உள்ளது. இதன் மூலம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் சாலை மேம்படுத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஊராட்சிகளில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு தற்போது ரோலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கு பதிலாக இயந்திரம் வாடகைக்கு தனியாரிடம் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிதி வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ரோடு ரோலர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் எங்கு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரோடு ரோலர் கொள்ளிடம் அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் சாலையோரம் மண்ணில் புதைந்து கிடக்கிறது.

இத்தகவலை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த ரோலர் இயந்திரம் ஏன் அங்கு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் புதிராகவே இருந்து வருகிறது. எனவே இந்த இயந்திரத்தை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Tags : ground ,panchayat , Soil, road roller, panchayat
× RELATED சுப்பையா நகரில் மைதானத்தை சீரமைத்த பொதுமக்கள்