×

கிழக்கு கடற்கரை சாலையோரம்: கண்மாய் கரைகளின் மண் சரிவால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

சாயல்குடி: சாயல்குடி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கக்கூடிய கண்மாய், ஊரணிக்கரைகளின் மண் சரிந்து சாலையில் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம்,தூத்துக்குடி,நாகப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை சாயல்குடி வழியாக செல்கிறது. இச்சாலையில் கொரோனா அல்லாத மற்ற நேரங்களில் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன்களும், கடலாடி பகுதியிலிருந்து மரக்கரிகள், பனை மரபொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. இதுபோன்று அதிகமான கனரன வாகனங்கள், அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என வாகனங்களால் இச்சாலையில் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சாயல்குடி பெரிய கண்மாய், கூரான்கோட்டை விலக்கு வரை உள்ளது, கடலாடி அருகே கீழச்செல்வனூர் கண்மாய், ஊரணி, இதம்பாடல் கண்மாய் ஆகியவை இ.சி.ஆர் பிரதான சாலையின் ஓரங்களில் அமைந்துள்ளது. இதனால் நீர்நிலை கரைகளின் மண் சரிந்து சாலையில் சிதறி வருகிறது. மழைக்காலத்தில் மழை பெய்தால் மண் சரிந்து விழுந்து சேரும், சகதியுமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர். சாயல்குடி பெரியகண்மாய் கரை சாலையின் ஓரம் அமைந்துள்ளது. தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாயில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மராமத்து பணிகள் நடந்து வருகிறது.

கரையை பலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இதனை போன்று கடந்தாண்டு கீழச்செல்வனூர் கண்மாய், இதம்பாடல் கண்மாய் ஆகியவற்றின் குடிமராமத்து பணிகள் நடந்தது. ஆனால் கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாலை நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. கிராமம் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  பல ஆண்டுகளாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் இக்கண்மாய் கரையோரங்களில் தடுப்புச்சுவர் யார் கட்டுவது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளின் கரையோரம் செல்லும் சாலையோரம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : banks ,Kanmai ,East Coast , East Coast Road, Kanmai Coast, Traffic
× RELATED பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்