டிக்டாக் செயலியை கையகப்படுத்தப்போவது யார்?: பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி.. ட்விட்டர் நிறுவனமும் பேச்சுவார்த்தை என தகவல்..!!

வாஷிங்டன்: டிக்டாக் செயலியை கையகப்படுத்துவதில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. ட்விட்டரும் அதில் இணைந்திருக்கிறது. டிக்டாக் அண்மை காலமாக அடிக்கடி விவாதிக்கப்படும் சொல். எல்லையில் சீனா உடனனான மோதலை அடுத்து, சீனா தயாரிப்புகளுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் தோன்றியது. இதனையடுத்து டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்தது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவிலும் டிக்டாக்  செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

எனவே டிரம்ப் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. செப்டம்பர் 15ம் நாள் முதல் தடை அமலுக்கு வரும் நிலையில், அதற்குள் அமெரிக்க நிறுவனத்திடம் டிக்டாக்கை விற்கலாம் என்ற வாய்ப்பை டிரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளது. டிக்டாக் உலகம் முழுவதும் புகழ்ப்பெற்ற ஒரு செயலி. அமெரிக்காவில் இதன் சந்தை மதிப்பு இந்திய மதிப்புகளில் பல்லாயிரம் கோடிகளில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்கள், டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கான போட்டியில் இறங்கியுள்ளன.

இந்த போட்டியில் மைக்ரோசாப்ட் முன்னணியில் இருக்கிறது. டிக்டாக்கை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிடம் மைக்ரசாப்ட்  நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதற்கு மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குநர் பில்கேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் ட்விட்டரும் இறங்கியுள்ளது. இதுகுறித்த பேச்சு தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் இப்போட்டியில் மைக்ரோசாப்ட் வெற்றிபெறும் என்றே சொல்லப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக்டாக் யார் வசம் செல்கிறது என்பது தெரியவந்துவிடும்.

Related Stories: