×

நாளை நமதே; 2021-ம் நமதே!: எடப்பாடியார் என்றும் முதல்வர்...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்

சென்னை: 2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்பதில் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் யார் முதல்வர் என்று முடிவு செய்வார் என்று செல்லூர் ராஜ் தெரிவித்திருந்தார். செல்லூர் ராஜீ கருத்தை மறுக்கும் வகையில் எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று ராஜேந்திர பாலாஜி டிவிட் செய்துள்ளார். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்!; எடப்பாடியாரை முன்னிறுத்தி களம்காண்போம் எனவும் பிதிவிட்டுள்ளார்.

2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று கருத்து தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இதில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அதிமுக ஆட்சி அமைத்தது. அதற்கு அடுத்ததாக திமுக அதிக இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் காலம் வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான  திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. தொகுதிகளில் புதிய பொறுப்புகள் அளிப்பது என சமீபத்தில் இரு கட்சிகளிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்ததுதான். மறுபக்கம், ஆளும் கட்சி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்படுவாரா? அல்லது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? இல்லை வேறு நபர் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்வியும் இருக்கிறது.

இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடியாக பதிலளித்திருந்தார். மதுரை மாவட்டம் பரவையில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்திருந்தார்.  இதனால், முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajendra Balaji ,Chief Minister , Tomorrow is ours, 2021 is ours , Edappadiyar , also ,Chief Minister ,Minister Rajendra Balaji tweeted
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...