×

இந்தியாவில் பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்பும் அதிகரிப்பு கொரோனாவுக்கு ஒரே நாளில் 1007 பேர் பலி; உலகளவில் பாதிப்பு 2 கோடியை நெருங்கியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு படுவேகமெடுத்துள்ள நிலையில், தற்போது பலி எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் முதன் முறையாக ஒரே நாளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று குறித்த பரிசோதனையை மத்திய, மாநில அரசுகள் விரிவுபடுத்தி உள்ளன. இதனால், கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் புதிதாக 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் புதிதாக 62,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 60ஆயிரத்தை கடந்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றினால் இதுவரை மொத்தம் 22 லட்சத்து 15,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் பலி எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே குறைவாக இருந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக பலி எண்ணிக்கையும் பயங்கரமாக அதிகரித்து வருகிறது. முதல் முறையாக ஒரே நாளில் 1000 பேர் நேற்று பலியாகி உள்ளனர். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1007 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 390 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் 1007 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையானது 44,386ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 2,45,83,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 4,77,023 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வைரஸ் பாதித்த 15,35,743 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 54,859 பேர் குணமடைந்துள்ளனர். 69.33 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 6,34,945 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் பாதிப்பு: இதே போல, உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியை நெருங்கி உள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக்கத்தின் அறிக்கையின்படி உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று வரை 1 கோடியே 97 லட்சத்து 78,566 ஆக உள்ளது. இதுவரை 7,29,692 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 5,044,769 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பிரேசிலில்3,035422 பேரும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் நோய் பாதித்த 1 லட்சத்து 62,919 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் இதுவரை 1 லட்சத்து 01,049 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். மெக்சிகோவில் 52,298 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. சர்வதேச அளவில் மொத்தம் 1 கோடியே 20 லட்சத்து 38,878 பேர் குணமடைந்துள்ளனர்.

* கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஜூன் 27ம் தேதி உலக அளவில் மொத்த பாதிப்பு 1 கோடி ஆனது.
* அடுத்த 44 நாட்களில் 2 கோடியை எட்டி உள்ளது. தற்போது உலக அளவில் ஒரே நாளில் இந்தியாவில் மட்டுமே 1000 பேர் பலியாகி வருகின்றனர்.

* தினசரி கணக்கெடுப்பில் தொடர்ந்து நம்பர்-1
உலக அளவில் மொத்த பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் இருந்தாலும் தினசரி பாதிப்பு, பலியில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் உள்ளது. மொத்த பாதிப்பு அரை கோடியை தாண்டிய அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 534 பேர் இறந்துள்ளனர். 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 22,213 பேர் பாதிக்கப்பட்டும், 593 பேர் இறந்தும் உள்ளனர். தற்போதைய நிலையில், இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் ஒரே நாளில் இறப்பு 1000 ஆக இல்லை. 2வது இடத்தில் உள்ள மெக்சிகோவில் கூட கடந்த 24 மணி நேரத்தில் 695 பேர் இறந்துள்ளனர். எனவே, தற்போதைய நிலையில், ஒரே நாளில் 1000 பேரை கொரோனாவுக்கு பலி கொடுக்கும் ஒரே நாடாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,India , India, death toll rises, Corona, 1007 killed in one day; The global impact is close to 2 crore
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...