ஆற்றில் இருந்து 6 உடல்கள் மீட்பு மூணாறு நிலச்சரிவு பலி 49 ஆக உயர்வு: 21 பேரை தேடும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 21 பேரை தேடும் பணி இன்று 5வது நாளாக தொடர உள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கண்ணன் தேவன் தேயிலை நிறுவன கணக்கின்படி குடியிருப்புகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 43 சடலங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து 28 பேர் இன்னும் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று காலை 4வது நாளாக மீட்புப்பணி தொடங்கியது. அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடந்தது. கனமழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அருகில் உள்ள ஆற்றில் நடந்த தேடுதல் வேட்டையில் சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் இருந்து அழுகிய நிலையில் 6 உடல்கள் மீட்கப்பட்டன.

உடல்கள் அழுகியிருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மூணாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மண்ணுக்கடியில் 21 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 5வது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் தமிழகத்தில் இருந்து மூணாறுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: