ரயில்வே வாரியம் விளக்கம் செப்.30 வரை ரயில்கள் ரத்து?

மும்பை: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில்கள் ரத்து தொடரும் என மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே அமைச்சகம் அறிவித்த ரத்து இன்னும் 2 நாளில் முடிய உள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து விதமான ரயில்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியத்தின் அறிக்கை ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் பெரிதும் வைரலானது. ஆனால், இதை தவறான செய்தி என ரயில்வே வாரியம் மறுப்பு வெளியிட்டது.

இது குறித்து ரயில்வே வாரியம் அளித்த விளக்கத்தில், ‘‘ரயில்களை இயக்குவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக புதிதாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்கள் ரத்து தொடரும்.  அதே போல, சிறப்பு ரயில்கள், மும்பையில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படும் உள்ளூர் ரயில்சேவையானது தொடர்ந்து இயக்கப்படும். ரயில்கள் இயக்கம் அல்லது ரத்து தொடர்பான சரியான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: