ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது: ராகுல்-சச்சின் பைலட் சந்திப்பில் சுமூகம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் சட்டப்பேரவை கூட இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், திடீர் திருப்பமாக ராகுலை சந்தித்தத சச்சின் பைலட் சமாதானமடைந்துள்ளார். இதனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு நிலவிய ஆபத்து நீங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. சச்சின் தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் கட்சிக்கு எதிராக போர் கொடி உயர்த்தினார். இதையடுத்து, அவருடைய துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூட்டப்பட இருக்கிறது. இதில் கெலாட் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 101 எம்எல்ஏக்களை கெலாட் அரசு கொண்டிருந்தாலும், கத்தி மேல் நடக்கும் நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், பேரவை கூட இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், திடீர் திருப்பமாக மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட், ராகுல் காந்தியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது, சச்சின் பைலட் ராகுல் காந்தியிடம் தனது தரப்பு குறைகளை கூறி உள்ளார். இதனை கேட்ட ராகுல் இவற்றுக்கு தீர்வு காண தனி கமிட்டி அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் சச்சின் துணை முதல்வர் பதவியையும், மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் உடனடியாக ஏற்க வேண்டும். சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக சச்சினும் அவரது ஆதரவாளர்களும் வாக்களிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பால், சச்சின் பைலட் சமாதானமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் சச்சின் தரப்பு கெலாட் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு இருந்த ஆபத்து நீங்கி உள்ளது. காங்கிரஸ் ஆட்சி தப்பி உள்ளது. இதைத் தொடர்ந்து, அரியானாவில் தனி ரிசார்ட்டில் தங்கியிருந்த சச்சின் பைலட் தரப்பு எம்எல்ஏக்கள் ராஜஸ்தானுக்கு திரும்பினர். இந்த சமாதான முயற்சி, முதல்வர் அசோக் கெலாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

* 3 குழு அமைப்பு

சச்சின் பைலட் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சி மேலிடம் உறுதி அளித்துள்ளது. ராகுல்-சச்சின் சந்திப்பு வெளிப்படையாக, வெற்றிகரமாக நடந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜெய்ப்பூர் திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான பன்வர்லால் சர்மா நேற்று முதல்வர் கெலாட்டை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் அளித்த பேட்டியில், ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எல்லா எம்எல்ஏக்களும் திரும்ப வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: