கரூர் அருகே பரிதாபம் செல்போன் சார்ஜர் வெடித்து தீ தாய், 2 குழந்தைகள் கருகி பலி: போலீஸ் விசாரணை

கரூர்: ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (65), குப்பம்மாள் (60) தம்பதியின் மகள் முத்துலட்சுமி (29). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மணவாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷித் (3), தக்ஷித் (2) என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பாலகிருஷ்ணன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் முத்துலட்சுமி, இரண்டு மகன்களுடன் பெற்றோருடன் கரூர் ராயனூரில் வசித்து வந்தார். நேற்றுவீட்டில் குழந்தைகளுடன் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். குழந்தைகள் இருவரும் அறையில்  தூங்க, முத்துலட்சுமி ஹாலில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே தரையில் மெத்தை விரித்து படுத்திருந்தார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் உட்புற பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின்படி தாந்தோணிமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மெத்தை முழுவதும் தீ பிடித்து எரிந்த நிலையில் முத்துலட்சுமி தீயில் கருகி இறந்து கிடந்ததும், மற்றொரு அறையில் இரண்டு குழந்தைகள் மயக்க நிலையில் கிடந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக இருவரையும் போலீசார் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் இருவரும் கரும்புகையில் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் போடப்பட்டு இருந்ததால் சார்ஜர் வெடித்து தீப்பிடித்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: