பிரபல ரவுடி கட்சியில் இணைந்தது பாஜ தலைவருக்கு தெரியாமல் நடந்ததா? பரபரப்பு தகவல்

சென்னை: பிரபல ரவுடி கட்சியில் இணைந்தது பாஜ தலைவருக்கு தெரியாமல் நடந்ததா என்ற கேள்வி தற்போது கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக பாஜவின் புதிய தலைவராக எல்.முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் கட்சியில் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முன்னிலையில் சிலர் பாஜவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு உடனே பதவிகள் வழங்கப்பட்டும் வந்தது. இதில் சிலர் பதவியை வாங்கி கொண்டு போனவர்கள் போனவர்கள் தான். கட்சி நடத்தும் நிகழ்ச்சியிலோ, ஆர்ப்பாட்டத்திலோ பங்கேற்பது இல்லை. மாறாக பாஜவின் பதவியை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இது கட்சிக்குள் இரவு, பகல் பாராது உழைப்பவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

மத்தியில் பாஜ ஆட்சியில் இருப்பதால் பலர் தங்களை கட்சியில் இணைத்து கொள்ள வருகிறார்கள். அதன் பிறகு காணாமல் போகின்றனர். இப்படி கட்சியில் இணைந்தவர்கள் கட்சிக்காக உழைத்து இருந்தால் தமிழகத்தில் பாஜ எங்கேயோ போய் இருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்காததால் மத்தியில் பவர் புல்லாக இருந்தும் தமிழகத்தில் பாஜக வளர முடியவில்லை என்று கட்சிக்காக பல ஆண்டு காலமாக உழைத்தவர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். பிற கட்சிகளின் நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் இணைந்தது போய் தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள் இணைந்து வருவது கட்சிக்காக உழைத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சனிக்கிழமை வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த கல்வெட்டு ரவி கட்சியில் இணைந்தார். அவருடன் மற்றொரு ரவுடி சத்யா(எ)சத்தியராஜ் என்பவரும் கட்சியில் சேர்ந்தார். பாஜ அலுவலகத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், இணைந்தவர்கள் பாஜ தலைவர் முருகன் முன்னிலையில் இணையவில்லை. பாஜ பொது செயலாளர் கருநாகராஜன் முன்னிலையில் இணைந்தனர். இந்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியானது. இதை பார்த்து பாஜ மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கொதித்து போய் விட்டதாக தெரிகிறது.

வழக்கமாக பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தான் கட்சியில் இணைவார்கள். ஆனால், மாநில தலைவர் எல்.முருகன் சென்னையில் இருந்தும் அவர் முன்னிலையில் இணையாமல் பொது செயலாளர் முன்னிலையில் இணைந்தது ஏன் என்று கட்சியினரிடையே கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு வேளை அவருக்கு தெரியாமல் கட்சியில் அவர்கள் இணைந்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் நேற்றுமுன்தினம் தனது இல்லத்தில் பேட்டியளித்த எல்.முருகனிடம் நிருபர்கள், பாஜவில் பிரபல ரவுடி இணைந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு எல்.முருகன், “ கல்வெட்டு ரவி கட்சியில் இணைந்ததாக ெசான்னார்கள். அது பற்றி விசாரித்து தான் சொல்ல வேண்டும்” என்று பதில் அளித்தார். கட்சியில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும் மாநில தலைவர் அனுமதியுடன் தான் நடைபெறுவது வழக்கம். அப்படி இருக்கும்போது எல்.முருகனின் பதில், பாஜவினரிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவருக்கு தெரியாமல் கல்வெட்டு ரவி கட்சியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற கட்சி நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் இணைந்தது போய் தற்போது பாஜவில் பிரபல ரவுடிகள் இணைந்து வருவது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories: